அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அரசு அறிவிப்பு.
2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதியம் வழங்க, ரூ.125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து , அரசுக் கல்லூரிகளாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டன.இந்த 41 கல்லூரிகளையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து, 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் 5699 (2423 + 41895 + 41381) கவுரவ விரிவுரையாளர்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2023 மற்றும் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை ரூ.125,37,80,000/- (நூற்று இருபத்தைந்து கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.
i) கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ii) தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் பட்சத்தில் அப்பணியிடத்தினை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும்.
iii) அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
iv) ஆசிரியர் - மாணாக்கர்கள் விகிதாச்சாரம் 1 : 30 என்ற விகிதாச் சாரத்தின்படி அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment