கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேவையான வழிகாட்டுதல்களை வழங்க போதிய கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர்கள் இருந்தால், எவ்வித அழுத்தமும் இன்றி அவர்கள் தங்களின் துறையை தேர்வு செய்யவும், அதற்கு உண்டான வழிகாட்டுதலை பெறவும் ஏதுவாக இருக்கும்.
மாணவர்களுக்கு பல திறன்கள் இருந்தும் அந்த திறன்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் இல்லாததால் அவர்களுக்கு எத்துறையை தேர்வு செய்வது எந்த வேலைக்கு செல்வது, தொழில் முனைவோராகலாமா, போட்டி தேர்வுக்கு தயாராகலாமா அல்லது உடனடியாக வேலைக்கு போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாத காரணத்தினால் மூன்று ஆண்டு முடிவில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் போது, அவர்களால் தனக்கு தேவையான துறையை உடனடியாக அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் குறைந்த பட்சமாக 1,000 மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும். ஏற்கெனவே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலர் அமர்த்தப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல் கல்வி இருந்தால் மட்டுமே அவர்களால் ஒரு மாணவனை அடுத்த நிலைக்கு தயார் செய்ய முடியும்.
எனவே, இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும் தேவையான வழிகாட்டுதலுக்கு உண்டான படிப்பை வழங்கவும் பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறையின் சார்பாக இரண்டு ஆண்டு முதுகலை கேரியர் கைடன்ஸ் மற்றும் ஓராண்டு பட்டய படிப்பான கேரியர் கைடன்ஸ் ஃபார் எக்ஸிக்யூடிவ்ஸ் (இணையவழி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளில் சேர ஏதாவது ஓர் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு இணையவழி பட்டயப்படிப்புக்கு முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://b-u.ac.in/146/pg-admission என்ற இணைய தளத்தில் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை படித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேரியர் கைடாகவும், கல்லூரிகளில் வேலை வாய்ப்பு அலுவலராகவும், நிறுவனங்களில் பயிற்சியாளர் மற்றும் ஹெச்ஆர் துறையிலும் வேலை பார்க்கலாம்.
மேலும் மாணவர்கள் சொந்தமாக வழிகாட்டுதல் மையத்தையும் தொடங்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2428239, 95650015656, 9566849767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Apply online
👇
https://b-u.ac.in/146/pg-admission
🙏
No comments:
Post a Comment