Search This Blog

29/09/2022

SSC க்கு தமிழக அரசு வழங்கும் ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு.

✴️✴️✴️✴️✴️✴️

     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்  08.10.2022 ஆகும். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியாக, இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது. கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் tamilnaducareerservices என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


🙏


No comments:

Post a Comment