11/11/2021

சென்னையிலிருந்து 170 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

 

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது. அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.

இந்நிலையில், வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இஎருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

சென்னையில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment