Search This Blog

11/09/2021

பாரதி(யார்)

bharathiyar history in tamil

பிறப்பு 

பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதியன்று தமிழ் நாட்டின் திருநெல்வேலி சீமையில் உள்ள  எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். (அவர் வாழ்ந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டமும் திருநெல்வேலி சீமை என்ற பெயரோடுதான் அழைக்கப்பட்டது) இவரது தந்தையின் பெயர் சின்னசாமி ஐயர் மற்றும் இவரது தாயாரின் பெயர் இலக்குமி அம்மையார்.

இயற்பெயர் 

பாரதியாரின் பெற்றோர் அவருக்கு சுப்பிரமணியம் என்ற பெயரை சூட்டினார்கள். இளம் வயதில் சுப்பிரமணியம் அனைவராலும் செல்லமாக சுப்பையா என்ற பெயரோடு தான் அழைக்கப்பட்டார்.

பாரதியார் பெயர் காரணம்

சுப்பிரமணியம் வருங்காலத்தில் மிகப்பெரிய கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். அதற்காக சுப்பிரமணியத்தை ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். ஆனால் சுப்பிரமணியத்துக்கு தமிழில் கவிதைகள் எழுதுவதில் தான் அதிகம் நாட்டம் இருந்தது. தனது 11ஆம் வயதிலேயே கவிதை எழுதுவதை அவர் தொடங்கிவிட்டார். சுப்பிரமணியத்தின் கவிதை எழுதும் திறமையைக் கண்டு வியந்த  எட்டயபுரத்தின் மன்னர், "பாரதி" என்ற பட்டத்தை சுப்பிரமணியத்திற்கு வழங்கினார். பாரதி என்று சொல்லிற்கு சரசுவதி தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டபவர் என்று பொருள். அன்றிலிருந்துதான் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டவர் சுப்ரமணிய பாரதியாக மாறினார்.

குடும்ப வாழ்க்கை

Bharathiyar family photos

1897ஆம் ஆண்டு பாரதியாருக்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அவர் வெறும் 14 வயது நிரம்பிய சிறுவனாகவே இருந்தார். பாரதியாரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் இருந்தார்கள். தங்கம்மாள் 1904 ஆம் ஆண்டிலும், சகுந்தலா 1908 ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.

பாரதியார் படைப்புகள்

பாரதியார் ஏராளமான கவிதைப் படைப்புகளை இயற்றியுள்ளார். குயில், பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, தமிழ் மொழி வாழ்த்து, கண்ணன் பாட்டு, ஞானரதம், விநாயகர் நான்மணிமாலை, முரசு உள்ளிட்டவை அவரது படைப்புகளில் சில குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

 

பாரதியார் அறிந்த மொழிகள்

பாரதியின் பதினாறாவது வயதில் அவரது தந்தை சின்னசாமி ஐயர் மரணம் அடைந்து விட்டார். தந்தையின் மறைவுக்கு பின்னர் பாரதியாரின் வாழ்க்கையை வறுமை புரட்டிப் போட்டது. பின்னர் பாரதியார் காசியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சில காலம் தங்கினார். அங்கே இருக்கும்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்று அம்மொழிகளில் புலமை பெற்றவரானார். இவை மட்டுமின்றி ஆங்கிலம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாரதியார் புலமைப் பெற்றவராக திகழ்ந்தார்.

பல மொழிகளை அறிந்து புலமை பெற்ற பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"   என்று பாடியதன் மூலம் தமிழுக்கு நிகரான மொழி வேறு எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழியை பெருமைப்படுத்தினார்.

பாரதியாரின் பணிகள்

எட்டயபுர சமஸ்தான பணி

சில காலம் கழித்து எட்டயபுரம் சமஸ்தான மன்னரிடமிருந்து பாரதியாருக்கு காசியிலிருந்து திரும்பி வருமாறு அழைப்பு வந்தது.  அந்த அழைப்பை ஏற்று பாரதியார் எட்டயபுரத்திற்கு திரும்பினார்.  எட்டயபுரம் சமஸ்தானத்தில் பணிபுரிகின்ற வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.  சில காலம் சமஸ்தானத்தில் பணியாற்றிய பாரதியார் திடீரென்று அந்த பணியிலிருந்து விலகி விட்டார். 

தமிழ் ஆசிரியர்

பிறகு சில காலம் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பாரதியார் பணியாற்றினார்.  ஆசிரியர் பணியிலும் தொடர்ந்து நீடிக்க பாரதிக்கு ஆர்வமில்லை. 

சுதேசமித்திரன் துணை ஆசிரியர்

சுப்பிரமணிய ஐயர் என்பவர் சுதேசமித்திரன் என்ற பெயரில் பத்திரிக்கையை சென்னையில் நடத்தி வந்தார். சுப்பிரமணிய ஜயருக்கு பாரதியாரின் அதீத எழுத்து திறமையை பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்திருந்தது. எனவே சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பொறுப்பை பாரதியாருக்கு கொடுக்க நினைத்தார். பாரதியாரும் அப்பணியை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். பத்திரிக்கையில் பணியாற்றுவது பாரதியாரின் மனதிற்குப் பிடித்த ஒரு தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் சுதேசமித்திரன் பத்திரிக்கை மூலம்  வந்த வருமானம் மிகக் குறைவாகவே இருந்தது. இதனால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சதேசமித்திரன் பத்திரிக்கையில் இருந்து விலகினார் பாரதியார்.

இந்தியா பத்திரிக்கை 

பிறகு தாமே சொந்தமாக  ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அந்த பத்திரிக்கைக்கு பாரதியார் இட்ட பெயர் இந்தியா. இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து  ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல  கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இதனால் ஆங்கிலேய அரசிடம் இருந்து பல அச்சுறுத்தல்கள்  பாரதியாருக்கு வந்தன.

பாரதியாரின் சிறப்புப் பெயர்கள்

மகாகவி, தேசிய கவிஞர், காளிதாசன் புதுக்கவிதையின் முன்னோடி, மக்கள் கவிஞர், வரகவி, தமிழ் கவி, விடுதலைக்கவி உள்ளிட்ட பல சிறப்புப் பெயர்களால் இன்றைக்கும் பாரதியார் போற்றி புகழப்படுகிறார்.

🙏

 

No comments:

Post a Comment