இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தகுதிகள்
- இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- குறைந்த பட்ச கல்வித் தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எத்தனை முறை தேர்வு எழுதலாம்
இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.
- பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.
- இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வில் இடஒதுக்கீடு
இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்.
தேர்வு முறைகள்
- இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
- முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
- முதனிலையில் தேறியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
- முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test).
- முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
- முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அனுப்பும்.
- பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்.