Search This Blog

11/07/2023

செயற்கை நுண்ணறிவு: படிப்பும் வேலை வாய்ப்பும்

 


உயர்கல்வி படிப்பவர்கள், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கான சவால்களில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது ’செயற்கை நுண்ணறிவு’. பணி வாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அறிந்துகொள்வது, அந்தத் துறையில் பணி வாய்ப்புகளை நாடுபவர்களுக்கு அவசியமாகிறது.

கடந்த காலத்தில் இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் எனப் பணியாளர்களுக்கு பதற்றம் தந்தவற்றின் வரிசையில் அண்மைக்கால வரவுதான் இந்த செயற்கை நுண்ணறிவு. மனித உடல் உழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. கைபேசி முதல் தானியங்கிப் போக்குவரத்துவரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நுகரத் தொடங்கியிருக்கிறோம்.

பணி வாய்ப்பும் உண்டு

புழக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பைப் பறிப்பது நிச்சயம் என்றாலும், அதைவிட அதிகமான பணிவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கும் என்கிறது உலக பொருளாதார கூட்டமைப்பு. கல்வி - வேலைவாய்ப்புத் துறையில் இருப்பவர்கள், அதை ஒட்டிய மாற்றங்களுக்கு தயாராவதே முன்னேற்றம் தரும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் எட்டாம் வகுப்பு முதற்கொண்டே செயற்கை நுண்ணறிவைச் சேர்க்க முடிவுசெய்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறையிலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறை மாணவர்கள் நேரடியாகச் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு குறிவைத்து தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மைத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை நடை முறைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. வாகன உற்பத்தி, மென்பொருள், நிதி ஆலோசனை போன்ற தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. அனைத்துமே தொடக்க நிலையில் இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை ஆராய்ந்து, அதற்கேற்ப திறன்களை பெருக்கிக்கொள்ளலாம்.

தானியங்கி நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிலைகளில், துணைசெய்யும் நுண்ணறிவு என்பதே பொதுப் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. இதில் மனித உத்தரவின் நிரல்களுக்குப் பணிந்து, தேவையானது செய்து முடிக்கப்படும். ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் இடங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம். இரண்டாவதாக, விரிவான நுண்ணறிவு என்பதில் மனிதர்களுடன் இணைந்தே பங்காற்றும். மனித மூளையின் நினைவுத்திறன், தர்க்கங்களை அலசுதல் உள்ளிட்டவற்றில் விரைந்து முடிவுகளை வழங்கும்.

மனித மூளையின் அனுபவ அறிவு, உணர்ச்சி ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அனைத்திலும் இயந்திர உதவியை இதன் மூலம் சாத்தியப்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக மனிதர்கள் ஒதுங்கிக்கொள்ள, முழுவதும் இயந்திரங்களே ஆராய்ந்து செயல்படும் தானியங்கி நுண்ணறிவு வருகிறது. தற்போது பரிசோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் தானியங்கி வாகனங்கள் இதற்கு உதாரணம். இவை அனைத்தின் தொகுப்பாக ‘Humanoids’ எனப்படும் மனித மூளையை நகலெடுத்த செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்கள் வரவிருக்கின்றன.

படிப்புகள் என்ன?

அடிப்படைக் கணினி அறிவியல், பொறியியல் படிப்புகளுடன் ஆழ்நிலைக் கற்றல் (Deep Learning), இயந்திரக் கற்றல் (Machine Learning) போன்றவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பாதை அமைத்துத் தரும். தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் இவற்றைப் பகுதி நேர சான்றிதழ், பட்டயப் படிப்பாக வழங்குகின்றன. இளநிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பொறியியல் படிப்புகளை முடிப்பவர்கள் முதுநிலையில் ‘ரோபாடிக்ஸ் - ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ படிப்பைப் படிக்கலாம். முதுநிலை பட்டயப் படிப்பாகவும் பல கல்வி நிறுவனங்கள் இந்தப் படிப்பை வழங்குகின்றன.

பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்கள்வரை ஏராளமான நேரடி வேலைவாய்ப்புகள் உள்ளன. கணினிமயமாக்கம் அனைத்து துறையிலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போன்று, அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவும் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது. அதற்கு இப்போதே தயாராவது நல்லது.

🙏




No comments:

Post a Comment