Aadhar PAN Link: ஆதார் (Aadhar Pan Link) உடன் பான் கார்டை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. CBDT அதாவது மத்திய நேரடி வரி வாரியம் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் (Aadhar) ஆகியவற்றை இணைப்பதற்கான கடைசி தேதியாக 31 மார்ச் 2021 ஐ நிர்ணயித்தது. ஆனால் இப்போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்து இந்த கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு இந்த மிகப்பெரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் (Aadhaar Card) உடன் பான் கார்டை ( PAN) இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை 'Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
முன்னதாக நேற்று மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள். இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது எனக் தெரிவித்திருந்தது. இதனால் கடைசி நாளான நேற்று இணைய தளத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்தனர். இதனால் இணைய தளம் முடங்கியது. பெரும்பாலானோரால் இணைக்க முடியவில்லை. மேலும், காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.