தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, அவருக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.
எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.
🙏🏼