Search This Blog

10/09/2024

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு அக்டோபரில் கலந்தாய்வு

 

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 7,350 பேர் விண்ணப்பம் - அக்டோபரில் கலந்தாய்வு


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 7,350 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளன. வரும் அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் வரும் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர்.


இதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,500 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,450 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,400 பேரும் என மொத்தம் 7,350 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.


விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் தகுதியான மாணவ - மாணவியரின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


🙏



No comments:

Post a Comment