Search This Blog

21/09/2024

BNYS - கலந்தாய்வு 23 ஆம் தேதி தொடங்குகிறது.



இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு வரும் 23-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த 2 அரசு கல்லூரிகளிலும் 160 இடங்கள் உள்ளன. 16 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,500 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்கள் உள்ளன.

யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்பு (BNYS) ஐந்தரை ஆண்டுகள் கொண்டது.பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், 2024-25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நடந்தது. இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவ, மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு2,320 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,243 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு1,187 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,173 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்களை அரும்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19-ம் தேதி மாலை வெளியிட்டார். தமிழக அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி, இணை இயக்குநர்கள் பார்த்திபன், மணவாளன், மாணவர் தேர்வு குழு செயலர் கிருஷ்ணவேணி உடனிருந்தனர். தரவரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தின் அப்சர் பேகம் (கட்ஆஃப் 198.50), நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் கோவை மாவட்டத்தின் ஜெயசிவனிதா (கட்ஆஃப் 195) ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் யோகா, இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினர், 24-ம் தேதி பொது பிரிவினர், 26, 27-ம் தேதிகளில் நிர்வாகஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகள்போல, யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கினால் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


🙏


17/09/2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க செப் 26 கடைசிநாள்.

Tamil Nadu Government and Government-Aided Colleges of Education Admission 


The application fee is Rs.500/- for general category and Rs.250/- for SC/SCA/ST category


Online Application

 👉https://bed.tngasa.in/

ஆன்லைனில் விண்ணப்பம்: பி.எட் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள்

 www.tngasa.in

 என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலஅட்டவணையை மேற்குறிப்பிட்ட இணையத்தில் அறிந்துகொள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் பிஎட்மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ல்தொடங்கி 26-ம் தேதி நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து 30-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்.14 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்பு 23-ம் தேதி தொடங்கும். பிஎட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் எனமொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.




🙏

NIOS-10th & 12th பதவி உயர்வுக்கு தகுதியானவை - தமிழக அரசு அறிவிப்பு.

 தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவை” என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நம் நாட்டில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில், தேசிய திறந்தநிலை பள்ளி வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு உகந்ததல்ல என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பானது அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்: “மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10/09/2024

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு அக்டோபரில் கலந்தாய்வு

 

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 7,350 பேர் விண்ணப்பம் - அக்டோபரில் கலந்தாய்வு


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 7,350 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளன. வரும் அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் வரும் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர்.


இதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,500 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,450 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,400 பேரும் என மொத்தம் 7,350 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.


விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் தகுதியான மாணவ - மாணவியரின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


🙏



உதவி தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு அக்-19 தேதி நடைபெறுகிறது. கடைசி நாள் செப்-19.

 சென்னை: கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை செப்டம்பர் 5 முதல் 19-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.