தமிழர்கள் இல்லா மத்திய அரசு அலுவலகங்கள். எங்கே போகிறோம்.
📣📣📣📣📣📣📣📣📣📣
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய 8,000 பணியிடங்களுக்கான குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் போட்டித் தேர்வினை 22 லட்சம் பேரும் 220 குரூப்-3 பணியிடங்களுக்கான தேர்வினை மூன்று லட்சம் பேரும் தமிழ்நாட்டில் எழுதியுள்ளனர். நல்ல ஊதியத்துடன், அதிகாரம் மிக்க 5,000-க்கும் அதிகமான பணிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மத்திய அரசுப் பணி தேர்வாணையம், ரயில்வே பணிகள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு வங்கிப் பணிகள் ஆகியவற்றுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டு மாணவர்கள் மிகக் குறைவாகவே விண்ணப்பிக்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பித்தாலும் அத்தகைய போட்டித் தேர்வுகளில் முறையான பயிற்சியின்றி சொற்ப எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.
தமிழ்நாட்டுக்குள் நல்ல ஊதியத்துடன், சமூகப் பாதுகாப்பு அளிக்கும் நிரந்தர, அதிகாரம் உள்ள மத்திய அரசுப் பதவிகள், பணியிடங்களில் வெளிமாநிலத்தவர் பணியாற்றிவருவதைச் சமீபத்திய புள்ளிவிவரங்களும் செய்திகளும் புலப்படுத்துகின்றன. வட இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றம் என்றாலே பெரும் போராட்டம் நடைபெறுகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக ‘அக்னிபாத்’ அறிமுகப்படுத்தப்பட்டபோது வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களை நாம் அறிவோம். ரயில்வே பணிகளுக்கான போட்டித் தேர்வில் கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டதால், பாட்னா போன்ற இடங்களில் நடந்த போராட்டத்தில் நான்கு ரயில்கள்கொளுத்தப்பட்டன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறி, டெல்லியில் பெரும் போராட்டம் நடைபெற்றது; உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவுகளை ஓராண்டு நிறுத்திவைத்தது.
இப்பணிகளில் சேர தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, மத்திய அரசில் இப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதே பெரும்பான்மை மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மத்திய அரசுப் பணிகள் என்றாலே வட இந்தியாவிலோ அல்லது டெல்லியிலோ பணியாற்ற வேண்டும், இந்தி தெரிந்தால் மட்டுமே இப்பணிகள் கிடைக்கும் என்பன போன்ற தவறான கற்பிதங்களும் தமிழக மாணவர்களிடம் உள்ளன.
தமிழ்நாட்டில் சிறிதும் பெரிதுமாக எண்பதுக்கும் மேற்பபட்ட மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் மட்டுமே ஏழு இயங்கிவருகின்றன. துணை ராணுவப் படையினர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் பணியாற்றிவருகின்றனர். மிகப்பெரிய அளவில் என்.எல்.சி, பாரத் மிகுமின் நிறுவனம், இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அன்றி கிராம அஞ்சலகங்களில், ரயிலில் பயணச்சீட்டுப் பரிசோதகர் பணிகளில் சமீப காலமாகத் தமிழர் அல்லாதோரே பணிநியமனம் பெற்றுவருகிறார்கள் என்பது கவலையளிக்கும் செய்தி.
நன்றி: இந்து தமிழ் திசை.
No comments:
Post a Comment