Search This Blog

08/05/2021

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்து DRDO கண்டுபிடிப்பு பயன்படுத்த மத்திய அரசு ஒப்பதல்.



தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation).

இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது கரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா 2வது அலை இந்தியாவைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில் கரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஸ்புட்னிக் தடுப்பூசியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் வடிவில் உள்ளது. இந்த மருந்தைத் தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டிஆர்டிஓ அமைப்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது. மேலும் இந்த மருந்து மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்து சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


நன்றி: இந்துதமிழ்.

No comments:

Post a Comment